தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை!

Print lankayarl.com in இலங்கை

மீன்பிடித் துறையில் நிலவும் பிரச்சனைகளுக்குத் துரித தீர்வை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

பிரதமருக்கும், மீனவ சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகளும் துறைசார் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா , அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

உற்பத்திச் செலவினம் அதிகரித்துள்ளமை, உற்பத்திக்கான விலையைப் பெற்றுக்கொள்ளுதல், மீன்பிடி உபகரணங்கள், பைபர் கிளாஸ் படகு, என்பவற்றின் விலை துறைமுகங்கள் மற்றும் களப்புக்களை அபிவிருத்தி செய்தல் போன்ற பல விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் தென்பகுதியிலிருந்து வருகை தந்திருந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் இதன்போது தாங்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சனைகள் மற்றும் தடைகள் தொடர்பில் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இங்கு சுட்டிக்காட்டினார்.

கடற்றொழில் கூட்டுத்தாபனம் உட்பட குளிரூட்டல் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கும் மீனவர்களின் வருமானத்தை வரியிலிருந்து விடுவிப்பதற்கும் ஐஸின் விலையை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இதன்போது பணிப்புரை வழங்கினார்.