சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்

Print lankayarl.com in இலங்கை

சட்டவிரோத உபயோகிக்கப்படும் துப்பாக்கிகளைக் கைப்பற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் தனியார் உளவாளிகளுக்கு பொலிஸ் நன்கொடை நிதியத்தினூடாக பணப்பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகளினூடாக சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு இந்த சன்மானம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, T-56 ரக துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருப்போரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு 50,000 ரூபாவும், தனியார் உளவாளிக்கு 20,000 ரூபாவும் பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

சந்தேகநபர் இன்றி T-56 ரக துப்பாக்கியை மாத்திரம் கைப்பற்றுவோருக்கு 10,000 ரூபா சன்மானம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. இதற்காக தனியார் உளவாளிக்கு 5000 ரூபா வழங்கப்படவுள்ளது.

பொலிஸ் நன்கொடை நிதியத்திலிருந்து சன்மானத்தை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.