தங்காலை துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது

Print lankayarl.com in இலங்கை

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தருகில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அங்கிருந்த நால்வர் உயிரிழந்ததோடு மேலும் 8 பேர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை தங்காலை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் (19) கைது செய்திருந்த நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த குறித்த சந்தேகநபரை இன்று (21) முற்பகல் 10.00 மணியளவில் பெலியத்து. கலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட இலக்கத்தகடு இன்றிய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அதற்காக பயன்படுத்தப்பட்ட தலைக்கவசங்கள் இரண்டையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் பெலியத்த தேங்காய் தோட்டமொன்றின் வடிகானில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு தலைக்கவசங்கள் இரண்டும் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர் பொகுணவத்த, கலகம தெற்கு நாகுலுகமவில் வசிக்கும் 31 வயதான எச்.கே. ரந்திக சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்றைய தினம் (21) தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.