புத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்!

Print lankayarl.com in இலங்கை

புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தக் கோரி, யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளின் புத்தளம் உள்ளிட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் குப்பை கொட்டப்படுவதற்கு எதிராகக் கடந்த 50 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள அருவக்காடு பகுதியில் 64 ஏக்கர் நிலத்தில் கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்நிலையிலேயே அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கையைக் கண்டித்து, “வெளிநாட்டின் குப்பைகளை எமது பிரதேசத்தில் கொட்ட வேண்டாம். சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகளை புத்தளம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டாம்“ என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.